29 – ருத்ராதித்யன்
அர்ஜுனும் யாத்ராவும் கடத்தப்பட்ட விஷயம் தெரிந்தததும் நந்தனும், சர்வேஸ்வரனும் முதலில் அமைதியாக தான் இருந்தனர்.
சிறிது நேரத்தில் கதிர் வந்து, “சார்… நம்ம அர்ஜுன் சார கடத்திட்டு போனது அந்த அனிமல் கில்லர் தான்… ஆனா யார் சொல்லி செஞ்சான்னு தெர்ல… வண்டியும் டெல்லி தாண்டி எங்க போச்சின்னு தெர்ல”, எனக் கூறியதும் மற்ற இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது.
அவர்கள் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் ஆகிறது. இன்னும் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
சர்வேஸ்வரனுக்கு அர்ஜுன் கடத்தப்பட்ட நான்கு மணிநேரங்கள் கழித்து அவர் கொண்டு வந்த சூட்கேஸை காசியில் கொண்டு வந்து கொடுக்க கட்டளையிட்டார்கள்.
” கதிர்… சார் பாதுகாப்பு இனி உன் பொறுப்பு…. கிளம்பு”, என நந்தன் அவர்களை அனுப்பிவிட்டு நரேனை சந்திக்க சென்றான்.
அந்த சமயம் ஆதித்யா போன் செய்தான்.
“டேய் நந்து… அஜ்ஜு யாது ரெண்டு பேரும் போன் எடுக்கல… எங்க அவங்க?”, எனக் கேட்டான்.
“அண்ணா… அது….. வந்து…. அது…..”, கூற முடியாமல் திணறினான்.
“என்னன்னு சொல்லு டா…. யாதுக்கு ஏற்கெனவே குண்டடிப்பட்டு இருக்கு…. எங்க அவங்க?”, ஆதித்யாவின் குரலில் இருந்த கண்டிப்பு நந்தனை நடந்ததை கூறவைத்தது.
“இன்னும் சிக்னல் வரலியா?”, என அடுத்த கேள்வி கேட்டான்.
“வரலண்ணா….. “
“சரி…. நான் நெடுமாறன்கிட்ட பேசிக்கறேன்….. அலர்ட்டா இரு…. “, என கூறிவிட்டு வைத்தான்.
“யப்பா… என்ன குரல் இது? போன்லயே கைகால் நடுங்குது…. நேர்ல இன்னும் கஷ்டமா போயிருக்கும்…. இவரு வேற இன்னும் அந்த பெங்காலி பொண்ணுகிட்ட கடலை போட்டுகிட்டு இருக்காரு….. “, என முனகியபடி உள்ளே சென்றான்.
“சார்.. ஒரு முக்கியமான விஷயம்…”, என சல்யூட் வைத்து விறைப்பாக நின்றான் நந்தன்.
நரேன் அதைக் கண்டு அறையில் இருந்த மற்றவர்களை வெளியே செல்ல ஆணையிட்டான்.
“என்ன ஸ்டேட்டஸ்?”, என முகபாவனை மாறியபடி கேட்டான்.
“சக்சஸ்…. சிக்னல்காக வையிட்டிங் சார்”
“குட்…. உங்களுக்கு தேவையானது எல்லாம் இந்த இடத்துல இருக்கு”, என ஒரு இடத்தின் அடையாள எண்ணை குறித்து கொடுத்தான் நரேன்.
“சார்…. இதுல….”, என இழுக்கவும், “நான் பாத்துக்கறேன் நந்தன்… உங்க வேலையை பாருங்க…. ஆல் த பெஸ்ட்”, எனக் கூறி அனுப்பி வைத்தான்.
நந்தன் முகிலை தன்னுடன் அழைத்துக்கொண்டு அருணாச்சல் சென்றான்.
பாலாஜியை மாறுவேடத்தில் இரண்டு நாட்கள் கழித்து அவ்விடம் வரச்சொல்லிவிட்டு சென்றனர்.
அர்ஜுனனும், யாத்ராவும் கடத்தப்பட்டு இருபது மணிநேரம் கழித்தே கர்நாடகாவில் அடைக்கப்பட்டனர்.
அந்த இருபது மணிநேரம் நரேன் முதல் பரிதி நெடுமாறன் வரையிலும் பதற்றமாகவே இருந்தனர்.
ஆதித்யா ஒரு பக்கம் யாத்ராவிடம் இருந்து சிக்னல் கிடைக்கிறதா என அந்த கணிணி அறை விட்டு வெளிவராமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மேகமலையில் இருந்து அவனுக்கு போன் வந்தது.
“ஆதி.. எங்கப்பா இருக்க? “, தமிழன்பன் கேட்டார்.
“இங்க தேனி வரைக்கும் வந்தேன்ப்பா… சொல்லுங்க”
“நம்ம ரணதேவ் ஐயா உன்னை வந்து பாக்க சொல்லி ஆள் அனுப்பி இருக்கார்…. லீஸ் விஷயமா பேச”
“மதியம் வீட்டுக்கு வந்துடுவேன் ப்பா…. சாயந்தரம் போய் பாக்கறேன்”
“சரி.. நானும் சொல்லி அனுப்பினேன்… அப்பறம் இந்த தாஸ் பயல இங்க காவலுக்கு இருக்க சொன்னியா?”
“யாத்ரா தான்ப்பா இருக்க சொல்லியிருக்கா…. ஜான் வந்தா என்கிட்ட பேச சொல்லுங்க….”
“எதாவது சிக்கலா ஆதி? “, என மகனின் குரலில் இருக்கும் இறுக்கம் உணர்ந்து கேட்டார்.
“அதுலாம் ஒண்ணுமில்லப்பா…. சின்ன வேலையா வந்தேன். அது சரியா நடக்கல… கிளம்பிட்டேன்…. வந்துடறேன்… தாஸ் பக்கத்துல இருந்தா போன் குடுங்க….”, என தனது இல்ல பாதுகாப்பு கேமிரா வழியே பார்த்துக்கொண்டு கூறினான்.
“இதோ இங்க மாட்டுகொட்டக கிட்ட தான் இருக்கான்… “, என தாஸை அழைத்து கொடுத்தார்.
“சொல்லுங்க சார்….”, பவ்யமாக பேச ஆரம்பித்தான்.
“வீட்ல எல்லாரையும் ஜாக்கிரதையா பாத்துக்க…. நான் வந்துடறேன்… இங்க உன் ஆள் இரண்டு பேர் இருக்காங்க… இங்க இருக்கணும்… நமக்கு ஆளுங்க இன்னும் கொஞ்சம் தேவைபடுவாங்க…. ஏற்பாடு செஞ்சிடு….”, என கூறி வைத்துவிட்டு மேகமலை நோக்கி புறப்பட்டான்.
ரணதேவ்வும் ஆருத்ராவும் பைரவ்வுடன் அந்த வீட்டில் வந்திறங்கினர்.
“வேலா…. பைரவனுக்கு ஒரு இடம் ஏற்பாடு பண்ண சொல்லு…. “, என ரணதேவ் கூறும் முன், “வெளியே குளிரும்…. உள்ளயே வச்சிக்கலாம் தனுப்பா…”, என கூறிவிட்டு அவனை தூக்கிக்கொண்டு தன்னறைக்கு சென்றாள்.
“சரி…. உள்ளயே ஒரு பக்கமா இடம் பண்ணுங்க….. அடுத்த வாரம் எல்லாரையும் இங்க வரவைக்கணும்… வெளியே மரத்துல ஒரு வீடு ரெடி பண்ண சொல்லு…. பறவை, நாய், பூனைன்னு எல்லாத்துக்கும் இடம் பண்ணணும்…. “, என கூறிவிட்டு ஆதியை வரச்சொல்ல ஆளை அனுப்பினார்.
தமிழன்பன் சொன்னது போல ரணதேவ்விடம் வந்து ஆதித்யா மாலை வருவதாக கூறினான் தகவல் கொண்டு சென்றவன்.
“சரி…. நான் கிராமம் வரைக்கும் போயிட்டு வரேன்”, என கூறி கிளம்பி தயாரானார்.
“நானும் வரேன் தனுப்பா…. பைரவ்வ தூக்கிட்டு போலாம்”, என தயாராகி வந்து நின்றாள்.
“இப்பவும் புடவையா? காட்டுல நடக்க வசதியா பேண்ட் போட்டுக்க சிங்கம்மா…. “, என அவளின் உடை பார்த்து கூறினார்.
“அடுத்த தடவை காட்டுக்குள்ள போலாம். இப்ப கிராமம் வரைக்கும் தான் நான் வரேன் தனுப்பா….”
“சரி…. “, எனக் கூறி ஜீப் ஓட்ட சென்று அமரும் முன் பைரவ் அந்த இடத்தில் அமர்ந்து இருந்தான்.
“டேய் படுவா… அந்த பக்கம் போடா… வண்டி நீயா ஓட்டப்போற?”, எனக் கேட்டதும் “வவ் லவ்”, என பதில் கொடுத்தான்.
“இவனுக்கு லொள்ளு அதிகம் தான் சிங்கம்மா…. “, எனக் கூறியபடி அவனை பின்னால் தூக்கி வைத்தார்.
அதில் அவனுக்கு கோபம் வந்து வவ் வவவ் வவ்வ்வவ்வவ் “, என சத்தம் போட்டுக்கொண்டு ஆருத்ராவை எட்டி பிடிக்க முயன்றான்.
“கொஞ்ச நேரம் கம்முன்னு வாடா…. அந்த பக்கம் பாரு காடு”, என ஆருத்ரா பேசவும் பின்னால் தெரிந்த காட்சிகளில் அமைதியாகி வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தான் பைரவ்.
“ஊர் சுத்த இவனுக்கு ரொம்ப பிடிக்கும் போல தனுப்பா… பாருங்க எப்படி வேடிக்கை பாக்கறான்…. நான் கொம்பன வெளியே கூட்டிட்டு போனா அவன் என்னை விட்டு நகரவே மாட்டான். வண்டிலையும் காவல் தான் காப்பான். இவன பாருங்க.. அவன் எஜமானன் மாதிரி படுத்துட்டு வேடிக்கை பாத்துட்டு வரான்”, என ஆருத்ரா அவனின் செயல்களை பார்த்து பேசியபடியே வந்தாள்.
“உன்ன அதிகம் இவன் மயக்கறான் சிங்கம்மா… அவன விட்டு உன்ன கண்ணெடுக்க விடாம பாத்துக்கறான் கேடி படவா…. “, என ரணதேவ்வும் சிரித்தபடி கூறினார்.
“சாக்லேட் படவா “, என ஆருத்ராவும் சிரிப்பில் கலந்துக்கொண்டாள்.
பழங்குடி கிராமம் வந்ததும் ஆருத்ரா இறங்கி பைரவனைத் தூக்கிக்கொண்டாள்.
அங்கிருக்கும் மற்ற நாய்கள் அவளைக் கண்டதும் ஓடி வந்தன. சுற்றி சுற்றி வந்து கையில் இருக்கும் குட்டியையும் பார்த்தன..
“வாங்கம்மா… வாங்கய்யா…. “, என ஏரன் முதலில் பார்த்துவிட்டு ஓடிவந்தார்.
“வணக்கம்”, என ஆருத்ரா பொதுவாக அனைவருக்கும் மென்சிரிப்புடன் கூறிவிட்டு அந்த இடத்தை கண்களால் ஆராய ஆரம்பித்தாள்.
“என்ன ஏரா எல்லாம் எப்படி போகுது?”, ரணதேவ் பொதுவாக பேச்சை தொடங்கினார்.
ஏரனும், ரணதேவ்வும் ஒத்த வயதுடையவர்கள் என்பதால் ரணதேவ் பெயர் சொல்லியே அழைப்பார்.
“மிதிலன் காட்டுக்கு போய் இருக்கான்… ஏதோ பெரிய உருப்படி இருக்குன்னு சொன்னான்….. அதான் ஆளுங்கள கூட்டிகிட்டு போக சொல்லியினுப்பிட்டேன்”
“எப்பவும் இருக்கறது தானே ஏரா… தனியா பாக்கற அளவுக்கு என்ன இருக்கு?”
“வழக்கமா இருக்கறது இல்லாம பெருசுங்கய்யா …. வனயட்சி பாட்டியும் பாக்க போக சொன்னாங்க… அமாவாசை பூசை வருது… காட்டுக்குள்ள தான் போயாகணும்… அதுவும் பாறைகூட்டத்த தாண்டணும்…”, என மெல்ல கூறினார்.
“பாரஸ்ட் ஆபிசருங்கள வரசொல்லவா ஏரா?”
“வேணாங்கய்யா…. அது எங்க இருக்கு? என்னனு பாக்கத்தான் போயிருக்காங்க… வரட்டும் அப்பறம் அவங்க உதவி தேவைப்பட்டா சொல்றேனுங்க”
“சரி…. வாக்கு கேக்கத்தான் சிங்கம்மாவையும் கூட்டிட்டு வந்தேன்… இந்த வருஷம் நல்லபடியா கல்யாணம் நடத்தி வைக்கணும்…”, என மனதிற்குள் இறைவனை நினைத்தபடி கூறினார்.
“அதுலாம் நம்ம சின்னம்மாவுக்கு சிறப்பா நடக்கும்ங்க ஐயா… கவலபடாதீங்க…. “
“சரி… ஆச்சிய பாக்கலாமா? போன தடவை நான் வந்தப்பவும் பாக்கல… இப்ப பேத்தியோட வந்திருக்கேன். அவங்கள பாத்துட்டா சந்தோஷம்….”, என வனயட்சி ஆச்சியின் வீட்டை பார்த்தபடி கேட்டார்.
“ஆச்சி…. நுவலி கூட எங்கயோ போனாங்க… வந்துடுவாங்கன்னு தான் நெனைக்கறேன்… நீங்க வாங்க… உங்களுக்கு இன்னிக்கு இங்க தான் மதிய சாப்பாடு… “, என ரணதேவ்வை அழைத்துக் கொண்டு குடிசைக்கு சென்றார்.
ஆருத்ராவை சுற்றியும் மற்றவர்கள் சூழ்ந்து கொண்டதால் பைரவை கீழே இறக்கிவிட்டு விட்டு அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
பைரவ் மெல்ல மெல்ல தன் சிறிய பாதங்களை எட்டு வைத்து அந்த இடத்தை முகர்ந்து பார்த்தபடி காட்டின் ஆரம்ப கோட்டிற்கு வந்திருந்தான்.
அங்கிருந்த மூலிகைகள் வாசம் அவனுக்கு என்னவோ பிடித்திருந்தது போல… அங்கேயே சுற்றி சுற்றி வந்தவன் வனயட்சி ஆச்சியின் வீட்டிற்கு ஓடினான்.
ஆருத்ரா அவனை கண்காணித்தபடியே தான் இருந்தாள். அவன் ஓடுவது கண்டு சிறுவர்களை அவன் பின்னே அனுப்பி தூக்கி வரக் கூறினாள்.
பைரவ் அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்து வாசலில் அமர்ந்து கொண்டான்.
தூக்க வரும் சிறுவர்களை தூக்க விடாமல் குரைத்து, கடித்து அங்கேயே படுத்துக்கொண்டான்.
“என்னடா பைரவா…. வந்துட்டியா?”, என ஆச்சியின் குரல் கேட்டதும் ஒரே தாவலில் அவர் மேல் ஏறி கழுத்தைக் கட்டிக்கொண்டான்.
ஆருத்ரா சிறுவர்கள் கூறியது கேட்டு வந்தவள் அவன் செயல்களை கண்டு அமைதியாக யோசனையுடன் நின்றாள்.
“வா தாயி…. இங்க வர உனக்கு இத்தன வருஷமா? உனக்காக நான் எத்தன காலமா காத்திருக்கேன் தெரியுமா? “, என ஆருத்ராவின் கன்னம் பிடித்து கொஞ்சினார்.
ஏனோ பல ஆண்டுகளாக நீர் சுரக்காத கண்களில் இன்று இரண்டு துளி கண்ணீர் வந்தது.
தூரத்தில் அந்த பாம்பு பைரவரை பார்த்துவிட்டு காட்டுக்குள் ஓடியது…
பைரவனும் பாம்பு சென்ற திக்கைப் பார்த்து ஊளையிட்டது…..