43 – ருத்ராதித்யன்
“இது எப்ப ஆதியண்ணா? எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல…. அதனால தான் உடனே கல்யாணம் வைக்கறாங்களா? ஆனாலும் இங்க நடக்கறதுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஒண்ணுமே புரியல…. நீ எப்போ இருந்து இவங்கள லவ் பண்ற? என்கிட்ட ஏன் சொல்லவே இல்ல? நான் லவ் பண்றேன்னு மொத உன்கிட்ட தானே சொன்னேன்… நீ மட்டும் என்கிட்ட சொல்லவே இல்ல…. போ உனக்கு என்மேல பாசமே இல்ல…. யாத்ரா அண்ணிகிட்ட மட்டும் சொல்லி இருக்க என்கிட்ட சொல்லல…. எல்லாரும் என்னை அவோய்ட் பண்றீங்க…”, என இதழி கண்ணை கசக்கவும் அண்ணன்மார்கள் இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் வந்து நின்று அவளை சமாதானம் செய்து தோப்புக்கரணம் போட்டனர்.
அதைக் கண்ட ஆருத்ரா அவர்களின் பாசபிணைப்பை பார்த்தபடி உதட்டில் மென்னகையுடன் ஆதியை பார்த்தாள். யாத்ரா ஆருத்ராவின் நடவடிக்கைகளை வேடிக்கை பார்த்தபடி சிரஞ்ஜீவ் நெடுமாறனை பார்த்தாள்.
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களின் சுரபிகள் தாறுமாறாக இருக்கும், அதனால் அவர்கள் மனநிலை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும். சட்டென கண்களில் கண்ணீர் வந்து விடும். இத்தனை நாட்கள் சிரஞ்ஜீவ் தனியே அனுபவித்ததை, இன்று அவள் அண்ணங்களும் அனுபவிக்கின்றனர்.
“சரி போதும் …. உன் கல்யாணத்துல எனக்கு பெரிய கிஃப்ட் வாங்கி தரணும்…. நான் தான் உனக்கு டிரஸ் செலக்ட் பண்ணுவேன்… ரிசப்ஷன் கிராண்ட் ஆ பண்ணனும்… அந்த டெகோரேஷன் நான் தான் டிசைன் போட்டு குடுப்பேன்…. ஆருத்ரா அண்ணி உங்களுக்கு ஓக்கே தானே?”,என கண்ணை துடைத்தபடி கேட்டாள்.
“உன் டிசைன் டிஸ்கஷன்ல தனுப்பாவ சேத்திக்கோ முகைம்மா…. அவரும் கொஞ்சம் ஆசை வச்சி இருக்காரு…. ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணுங்க… ஓக்கேயா ?”, ஆருத்ரா சிரித்த முகமாக இதழி அருகில் வந்து கூறினாள்.
“டபிள் ஓக்கே… “, இதழி அவளை கட்டிகொண்டாள்.
“ம்ம் க்ம்… க்கும்…” , யாத்ரா அருகில் வந்து கனைத்தாள்.
“உங்களை கட்டி பிடிக்கமாட்டேன் … அண்ணா லவ் பண்ற விசயத்த நீங்க என்கிட்ட சொல்லவே இல்ல …”, என சிறுக்குழந்தை போல முகத்தை திருப்பி கொண்டு யாத்ராவை இடித்துக் கொண்டு நின்றாள்.
“நீ கட்டிப் பிடிக்கலன்னா என்ன என் மருமகன் என்னை கட்டி பிடிப்பான்… “, என யாத்ரா இதழியின் வயிற்றோடு கட்டிப் பிடித்தாள்.
“மருமகனா… அதெப்படி சொல்லலாம்… எனக்கு பொண்ணு தான் வேணும்…”, என சிரஞ்ஜீவ் கூறினான்.
“உள்ள இருக்கறது மருமகன் தான்… அதுவும் என் செழியன் மாதிரியே வருவான் பாரு…..”, என சிவியிடம் கூறினாள்.
“முடியாது.. உள்ள என் பொண்ணு தான் இருக்கா…..”
“மருமகன் தான்”
“மருமகள் தான்”
“மருமகன் தான்”
“மருமகள் தான்”
“நாளைக்கு சாயிந்தரம் நீயே பாத்து தெரிஞ்சிக்க…. மருமகன் தான். என் செழியன் மாதிரி தான் வருவான்….”, என கூறிவிட்டு அக்குடிசையை விட்டு வெளியே சென்றாள்.
அவளைக் கண்டதும் தீரன் ஓடி வந்து அவளை இடித்து நின்றான். அவளும் அவனை கைகள் எட்டும் வரையில் கட்டிக்கொண்டாள்.
உடன் பைரவ் வந்து யாத்ராவின் மேல் ஏறி தோளில் பற்றி நின்றான். அவனையும் ஒரு கையில் தூக்கி தோள் மேல் போட்டுக் கொண்டு தமிழன்பன் இருக்கும் இடம் சென்றாள்.
கயல் அவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்டார்.
“யாத்ரா ….. நான் பயந்துட்டேன் டா….. நீங்க கண்ணு முழிச்சதும் தான் எனக்கு உயிரே வந்தது…. “, என அவள் முகத்தை இருபக்கமும் பிடித்தபடி கூறினார்.
“எனக்கும் அர்ஜுனுக்கும் ஒன்னும் இல்ல அத்த…. கவல படாதீங்க…. “, என அவரை கட்டிக்கொண்டு அவளும் ஆறுதல் கூறினாள்.
“சாப்பிட எதாவது குடுக்கவா ? ரெண்டு நாளா பால் மட்டும் தான் உங்களுக்கு வாய்ல கொஞ்ச கொஞ்சமாக குடுத்தாங்க….”
“அந்த பாட்டி ஏதோ கொண்டு வரேன்னு சொல்லி போனாங்க அத்த….. அவங்க என்ன குடுக்கறாங்கன்னு பாத்துட்டு பேசிக்கலாம்…. மாமா எங்க?”, என கேட்டாள்.
“நம்ம ஆதிக்கும் ஆருத்ராவுக்கும் அமாவாசை முடிஞ்சி வர மூன்றாம்பிறைல கல்யாணம் செய்யணும்னு ஆச்சி சொல்லிட்டாங்க….. அதான் ரணதேவ் ஐயா கூட பேசிட்டு இருக்கார் டா..”
“அத்த…. உங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?”, யாத்ரா அவரின் கண் பார்த்து கேட்டாள்.
“கொஞ்சம் பயமா தான் இருக்கு யாதும்மா… ஆன ரெண்டுநாளா ஆருத்ரா பேசறது பழகறது எல்லாம் பாத்த அப்பறம் மனசுக்கு நிம்மதியா இருக்கு.. ஆனாலும் நம்மள விட பல மடங்கு வசதியான வீட்டு ப்பொண்ணு.. நம்ம வீட்ல சௌகரியம் பத்துமோ இல்லயொன்னு தான் நான் யோசிக்கிறேன்….. “
“அத்தான் மாமா எல்லாம் என்ன சொல்றாங்க அத்த…”
“உங்க மாமாவுக்கும் எனக்கு இருக்க அதே பயம் தான்… பையன வீட்டோட கூப்பிட்டுப்பாங்களோன்னு பயம் இருக்கு இன்னும்…. ராஜ பரம்பரைன்னு சொன்னதும் கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு…. ஆனா ஆருத்ரா அதுலாம் பாக்காம உன் பக்கத்திலேயே இருந்து ரெண்டு நாள உனக்கு எல்லா வேலையும் செஞ்சது பாத்து எங்களுக்கு மனசு குளிர்ந்து போச்சு டா… உன்ன மாதிரியே ஆருத்ராவும் நம்ம குடும்பம்ன்னு எடுத்து பழகரது சந்தோசமா இருக்கு….”, கயல் மனம் விட்டு தன் மனதில் உள்ளதை பேசினார்.
“அத்தான்….”
“அவன் ரெண்டு நாளா தூங்காம காவல் காத்துட்டு இருக்கான் டா… ஆருத்ரா வளக்கற அத்தன பிராணியும் அந்த பக்கம் இருக்கு…. போய் பாரு உனக்கு பிடிக்கும்…. அதுல ரெண்டு கிளி எவ்ளோ அழகா பேசுது தெரியுமா? அந்த கொம்பன்ன்ற நாய் எவ்ளோ அம்சமா காவல் இருந்து மத்த பிராணிய எல்லாம் கட்டுகுள்ள வைக்குது தெரியுமா? இத்தனையும் ஆருத்ரா வளத்து இருக்கா…. அவ காட்டு பக்கம் நின்னாலே அவ கூட மூணு வேட்டை நாய் வந்து நின்னுக்குது…. பாக்கவே எல்லாம் அதிசயமா இருக்கு யாதும்மா….”
“சரிங்க அத்த…… இதழிய தனியா விடாதீங்க…. கூடவே இருங்க… இங்க பிரசவம் பாக்கறவங்க இருந்தா கூப்டு பக்கத்துல வச்சுக்கோங்க… எப்போ வேணாலும் பிரசவ வலி வரும்….”, என கூறிவிட்டு அந்த கிராமத்தை சுற்றி வந்தாள்.
இப்படி சொல்லிச் செல்லும் அவளை பார்த்துவிட்டு மகளிடம் ஓடினார்.
“முகை.. உனக்கு உடம்பு எதாவது பண்ணுதா டா?”, என கேட்டார்.
“இல்ல மா…. நல்லா தான் இருக்கு…”
“யாத்ரா உனக்கு எப்போ வேணாலும் பிரசவ வலி வரும்ன்னு சொல்லிட்டு போறா…. அதான் ஓடி வந்தேன்….”
“நாங்களும் அதான் ம்மா பேசிட்டு இருந்தோம்…. இன்னும் டாக்டர் சொன்ன நாளுக்கு பதினைஞ்சு நாள் இருக்கு ஆனா யாத்ரா நாளைக்கு சாயந்திரம் கொழந்தை பிறந்துடும்ன்னு சொல்றாலேன்னு….”, ஆதி.
“அவளுக்கு முகை வயித்த தொட்டதும் எதோ உணர்ந்து சொல்லி இருக்கா… “, என அர்ஜுன் முகை வயிற்றில் கை வைத்தான்.
உள்ளே குழந்தை முழுதாக தலை கீழ்நோக்கி திரும்பிவிட்டது என்று உணர்ந்தான். நன்றாக வயிறும் கீழே இறங்கிவிட்டது. குழந்தையின் இதயத்துடிப்பு அவனுக்கு தெளிவாக கேட்டது. உள்ளே குழந்தை அசையும் போது நீர் எழுப்பும் சத்தம் வரையிலும் தெளிவாக கேட்டது. எந்த நேரமும் குழந்தை ஜனிக்கவிறுக்கிறது. அதற்கான செயல்பாடுகள் உள்ளே தொடங்கவிட்டது. யாத்ரா முகையின் வயிற்றை தொட்டதும் இவை அனைத்தும் உணர்ந்தாள், அதை இப்போது அர்ஜுனும் உணர்ந்தான்.
“அம்மா…. இவளுக்கு வேண்டியத ரெடி பண்ணுங்க….ஆதி…. வா உன்கிட்ட பேசணும்…”, என அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
ஆருத்ரா முகைக்கு தேவையான இடத்தையும், மற்ற பொருட்களையும் தயார் செய்ய சென்றாள். சிரஞ்சீவ் தனது மனைவியையும், மாமியாரையும் பார்த்துவிட்டு கண்மயாவை
பார்த்தான்.
“அவங்க உடம்புல சில மாறுதல்கள் வந்திருக்கு, அதனால் இந்த உணர்தல் வந்திருக்கலாம் சார்….”, என கூறிவிட்டு யாழனை அழைத்துகொண்டு வெளியே சென்றாள்.
“சிவி… ஒரு நிமிசம் வா….”, என கஜேந்திர நெடுமாறன் வந்து அழைத்தான்.
“என்னடா ?”
“அந்த புலி இருக்க இடத்துக்கு போ… நான் அர்ஜுன கூட்டிட்டு வரேன் …”, என கூறிவிட்டு சென்றான்.
அர்ஜுன் ஆதியிடம் அவர்கள் நினைவில்லாமல் இருந்த நாட்களில்
நடந்தவற்றை பற்றி கேட்டுக் கொண்டிருந்தான்.
“நந்துவுக்கு அடி பட்டிருக்கு…. அவன அங்கேயே பாத்துக்க சொல்லிட்டேன். செந்தில் வந்திருக்காரு… தேனி வீட்ல தங்க வச்சி இருக்கேன். ஜான் தாஸ் மேகமலை முழுக்க காவல் காக்கறாங்க….. நம்ம கண்காணிப்பு மீறி யாரும் உள்ள வரமுடியாது ..”, என ஆதி அவன் செய்திருக்கும் ஏற்பாடுகள் வரை கூறி முடித்தான்.
அர்ஜுன் செவிகள் சட்டென விரைத்தன… ஏதோ ஒரு அமானுஷ்ய சத்தம், அவன் கண்களுக்கு தெளிவில்லாத உருவம் பைரவவ் அருகில் இருப்பதை கவனித்தான். ஆனாலும் இந்த சத்தம், மரம் விட்டு மரம் தாவும் குரங்கு கூட்டம் போன்று தோன்றினாலும், மரத்தின் சலசலப்பு சத்தம், அதிக கனம் கொண்ட சரீரம் தாவுவது போல தோன்றியது.
சட்டென காட்டிற்குள் ஓடினான். அவன் பின்னூடே ஆதியும் ஓடினான். கஜேந்திரன் இவர்கள் ஓடுவது கண்டு கிராமத்தை சுற்றி பாதுகாப்பை பலப்படுத்திவிட்டு பரத்தை அழைத்தான்.
“சொல்லு கஜா…”, அந்த பக்கம் செந்தில் அழைப்பை எடுத்தார்.
“காட்டுக்குள்ள யார் நுழைஞ்சு இருக்காங்கன்னு பாருங்க சார்… அர்ஜுனும், ஆதியும் வடக்கு பக்கம் காட்டுக்குள்ள ஓடறாங்க…”, எனக் கூறினான்.
“இரு பாக்கறேன்….”, என கூறிவிட்டு காட்டை சுற்றி வைத்திருக்கும் கேமரா வழியாக காட்டினை பார்த்தான்.
அதிரன் மற்றும் ருதஜித் இருவரும் மகதன் இருக்கும் பக்கம் சென்று கொண்டிருப்பதை கண்டு விட்டு, செந்தில் அந்த பக்கம் காவலுக்கு நின்றவர்களைத் தொடர்ப்பு கொள்ள முயற்சித்தான்.
அவர்கள் மகதனை மிக அருகில் நெருங்கி வந்துவிட்டனர், அவர்களுக்கு பின்னால் ஆயுஷ் துப்பாக்கியுடன் மகதனை குறி பார்த்துக் கொண்டிருந்தான்.