5 – ரெட்டைக்குன்றுக் கோட்டை
“என்ன சொல்ற இனன்யா?” என அருள்நம்பி புரியாத பார்வையுடன் கேட்டான்.
“வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இந்த பணத்த பசங்ககிட்ட குடுத்துட்டு வீட்டுக்கு வா..” என இனன்யா அஞ்சலியுடன் இல்லம் சென்றாள்.
அருள்நம்பி தங்கள் தோழர்களை சந்தித்து பேசியபடி பேய் இருப்பது போல நம்பவைக்க ஆடிய நாடகத்திற்கு பணம் கொடுத்துவிட்டு உணவு வாங்கிக் கொண்டு இல்லம் வந்துச் சேர்ந்தான்.
அருள்நம்பி இல்லமும், இனன்யா இல்லமும் அடுத்தடுத்த இல்லம் என்பதால் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பர். மூவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகவும், துணையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
“அஞ்சலி.. இனன்யா எங்க?” என உள்ளே வந்ததும் கேட்டான்.
“என்னமோ எடுத்துட்டு வரேன்னு வீட்டுக்கு போனா அண்ணா. இப்போ வந்துடுவா..” என அஞ்சலி உணவு வகைகளைப் பிரித்து வைத்தபடிக் கூறினாள்.
அருள்நம்பி மூவருக்கும் சாப்பிடும் தட்டு மற்றும் குடிக்க தண்ணீரும் மொண்டு வந்து வைத்தான்.
“என்ன க்ரில் சிக்கன் எல்லாம் வாங்கிட்டு வந்திருக்க? கைல காசு பொரலுதோ?” என அஞ்சலி நக்கலாகக் கேட்டாள்.
“ஆமா.. இன்னிக்கி நல்லா கத்தையா பணம் கெடச்சது. சம்பாதிக்கறதே நல்லா சாப்பிட தானே அதான் வாங்கிட்டு வந்தேன். உனக்கு பிடிச்சது, அவளுக்கு பிடிச்சது, எனக்கு பிடிச்சது எல்லாமே வாங்கிட்டு வந்திருக்கேன்..”
“பில் எவ்ளோ ஆச்சி?”
“அது ஒரு மூவாயிரம் ஆச்சி..” என நம்பி கூறியதும் அஞ்சலி முறைத்தாள்.
“காலைல பத்து பைசா இல்லைன்னு என்கிட்ட எவ்ளோ வாங்கின? இப்போ இவ்ளோ செலவு எதுக்கு? அதுக்கு கறி ஒரு கிலோ எடுத்தா கூட இவ்ளோ பணம் ஆகாது..” என அஞ்சலி அண்ணனைக் கண்டித்தாள்.
“விடு அஞ்சலி அவன திட்டாத. நான் தான் வாங்கிட்டு வர சொன்னேன்..” எனக் கூறியபடி இனன்யா கதவை அடைத்துவிட்டு உள்ளே வந்தாள்.
“அவன எதுவும் சொல்லமுன்ன நீ வந்துடு. உனக்கும் வேலை இல்ல அவனுக்கும் இப்போ வேலை இல்ல. நாளைக்கு எப்படி வீட்டு வாடகை கட்டறது? மத்த செலவு எல்லாம் எப்படி என் ஒருத்தி சம்பளத்த வச்சி சமாளிக்கறது?” என அஞ்சலி அவளிடம் முறைப்புடன் கேட்டாள்.
“இனிமே நாங்க வேலை தேட போறது இல்ல. நாங்க தான் ரெண்டு பேருக்கு வேலை குடுக்க போறோம். நான் பேசறத கொஞ்ச நேரம் உன் நேர்மை, நியாய புத்திய நுழைக்காம கேளு..”
“அப்போ ஏமாத்தி பொழைக்க போறீங்களா?” என அஞ்சலி கோபமுடன் கேட்டாள்.
“ஆமா.. இந்த உலகத்துல நியாயமா இருந்து இத்தன வருஷம் என்னத்த சாதிச்சோம் நம்ம? பொறந்ததுல இருந்து கஷ்டம் மட்டும் தான் பட்டுட்டு இருக்கோம். இனிமேலும் கஷ்டம் மட்டுமே படமுடியாது அஞ்சலி..” எனக் கூறியவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
“சரி மொத சாப்பிடலாம் அப்பறம் நம்ம சண்டைய வச்சிக்கலாம். உக்காரு அஞ்சலி சாப்பிடு..” என நம்பி அவளை சாப்பிட வைத்துவிட்டு தானும் உண்டுமுடித்தான்.
“என்ன பண்ணலாம்னு இருக்க இனன்யா?” என நம்பி அவளிடம் கேட்டான்.
“இந்த போஸ்டர் பாரு. நேத்து நான் நம்ம தெருவுல பாத்தேன். இந்த பேய் ஓட்டற வித்தையை கத்துகிட்டா கட்டு கட்டா பணம் சம்பாதிக்கலாம்…”
“எது இந்த காஷ்மோரா படம் மாதிரியா?” என அஞ்சலி சிரிப்புடன் கேட்டாள்.
“ஒரு நாள் அப்படி செய்யறதுக்குள்ள எனக்கு நாக்கு தள்ளிடிச்சி. தினமும் எல்லாம் அப்படி பண்ண முடியாது. இது நிஜமா கத்துகிட்டு பேய ஓட்டணும்..”
“ஹேய்.. லூசா நீ? பேய் என்ன பக்கத்து கடை ஆயாவா நீ போவ சொன்னதும் போறதுக்கு? அதுலாம் ஒண்ணும் வேணாம்.” என நம்பி திட்டினான்.
“ம்ச்.. நான் சொல்றத முழுசா மொத கேளு டா. இந்த பேய் ஓட்ட சொல்லி குடுக்கற குரூப் நமக்கு பேசிக்கா சில தில்லாலங்கடி வேலை சொல்லி குடுத்துட்டு, நல்ல பெரிய இடமா இருந்தா பிரச்சனை பெருசுன்னு சொல்லி அவங்கள கூப்பிட்டு விட்டுட்டா போதும். இந்த குரூப் அந்த டான்ஸ் சாமியாரோட இன்னொரு கேங் தான். இங்க பாரு..” என அந்த குறிப்பிட்ட சாமியாரின் கூட்டத்தில் இருந்தவன் தான் இந்த ‘பேய் ஓட்டும்’ கூட்டத்தின் தலைவனாக இருந்தான்.
“ஏற்கனவே அந்த சாமியாருக்கு கோடி கோடியா தானே கொட்டுது இதுல இந்த வேலை எதுக்கு அவனுக்கு?” என நம்பி கேட்டான்.
“எவ்ளோ பணம் வந்தாலும் ஒரு சிலர் எல்லாம் திருப்தியாகமாட்டாங்க.. அதுல இவனும் ஒருத்தன். ஏற்கனவே அவங்கிட்ட போற பொட்ட புள்ளை எல்லாம் என்ன ஆகுதோ தெரியல. இதுல பேய் ஓட்ட ஒரு கூட்டமும் நடத்தறான்.” என அஞ்சலியும் கூறினாள்.
“சரி இதுக்கு என்ன செய்யணும்? எங்க கிளாஸ் எடுக்கறாங்க?”
“நம்ம பேர ரிஜிஸ்டர் பண்ணிட்டா அவங்களே நம்ம போக வேண்டிய இடமும், யாருக்கு கீழ வேலை பாக்கணும்னு சொல்லிடுவாங்க. இப்போதான் ஃபோன் பண்ணி கேட்டேன்..”
“இதுக்கு பணம் எவ்ளோ கட்டணும்?”
“முப்பது ஆயிரம். ரெண்டு பேருக்கு..”
“அவளோ பணம் உன்கிட்ட ஏது?” என அஞ்சலி கேட்டாள்.
“இன்னிக்கி வீடு காலி பண்ணதுக்கு 80 ஆயிரம் குடுத்தான் அந்த ஆளு..” என நம்பி கூறினான்.
“இதுலாம் ஏமாத்து வேலை. இதுக்கு ஒரு சின்ன கம்பெனில சேர்ந்தா கூட நிம்மதியா வாழலாம். இந்த வேலை பாத்தா எப்போ என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு தான் இருக்கணும்..” என அஞ்சலி அவர்களை எச்சரித்தாள்.
“நீ ஒண்ணும் கவலைபடாத இதுவும் ஃபிரான்சைஸ் மாதிரி தான். இதுக்குன்னு ஒரு நெட்வொர்க் இருக்கு. நம்ம இருக்க ஏரியாவுல யாரு பிரச்சனைனு சொல்றாங்களோ அங்க தான் நம்ம பாக்கணும். நமக்கு எந்த ரிஸ்க்கும் இல்ல. நீ இந்த வீட்ட காலி பண்ணிட்டு ஹாஸ்டல் சேர்ந்துடு. நாங்க நாளைக்கு காலைல கெளம்பறோம்.”
“இனன்யா வேணாம் டி..”
“இதுக்கு மேல என்னால எந்த ஐடி கம்பெனிலையும் வேலை பாக்க முடியாது அஞ்சலி. புரிஞ்சிக்க.. நான் காலத்துக்கும் கஷ்டப்பட ரெடியா இல்ல… நம்பி வேணும்னா வரவேணாம்..”
“உன்ன அப்படி எல்லாம் தனியா விடமுடியாது. அஞ்சலி நான் இவள பாத்துக்கறேன். கொஞ்ச நாள் நல்லா சம்பாதிச்சதும் வேற ஊருக்கு போய் நம்ம ஒண்ணா வாழலாம். அதுவரைக்கும் தானே இப்படி..”
“அப்போ நான் தனியா இருக்கலாமா?” என அஞ்சலி கேட்டாள்.
“இங்க பாரு அஞ்சலி. நான் உங்களை பிரிக்க நினைக்கல. நம்பிக்கு ஒரு வேலை கெடைக்கற வரை என்கூட இருக்கட்டும்.”
“ஆனா என்னை நீ பிரிக்கற டி.. உன்ன விட்டுட்டு நான் மட்டும் எப்படி இருப்பேன்?” என அஞ்சலி கண்களில் நீருடன் கேட்டாள்.
“அன்னிக்கி அந்த பொறம்போக்கு சொன்னத நீயும் கேட்டல்ல. நான் படுத்தா தான் அவன் அளவுக்கு சம்பாதிக்க முடியுமாம். அவன்கூட படுத்தா என்மேல இருக்க கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்கிட்டு வேலையும் வாங்கி தரேன்னு சொல்றான். இதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற?” என உதடுகள் துடிக்க இனன்யா கேட்டாள்.
“அவங்க எல்லாம் இருக்கற வர்க்கம் அதான் இவ்ளோ திமிரா பேசறான்.. அவன பசங்ககிட்ட சொல்லி அடிச்சி கைய கால ஒடச்சிடலாமா?” என நம்பி கோபமுடன் கேட்டான்.
“அதுக்கும் அவன் என்மேல தான் கேஸ் போடுவான். நீ ஒழுங்கா அன்னிக்கி இருந்திருந்தா இன்னிக்கி உன் வேலையாவது உனக்கு இருந்திருக்கும். பெரிய ஹீரோ மயிறுன்னு நெனைப்பு உனக்கு.. அவன் சட்டைய பிடிச்சிட்டு அப்படி ஏறுற அன்னிக்கி.. நான் சொன்னது ஒன்னாவது உன் காதுல விழுந்துச்சா? நான் தான் நைசா ஹெச். ஆர்கிட்ட பேசிட்டு இருந்தேன்ல.. இப்போ உன்மேலயும் கேஸ் இருக்கு என்மேலயும் கேஸ் இருக்கு..” என இனன்யா அவனைத் திட்டினாள்.
“உன் மேல கை வச்சா என்னை சும்மா பாத்துட்டு இருக்க சொல்றியா? எனக்கு அஞ்சலி மாதிரி தான் நீயும். உங்க ரெண்டு பேருக்கும் எந்த கெட்டதும் நடக்க விடமாட்டேன். என்னால முடிஞ்சத நான் எப்பவும் செஞ்சிட்டு தான் இருப்பேன்..” என நம்பியும் கோபமுடன் கூறினான்.
“சரி சரி.. ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க.. இனன்யா.. இந்த வேலை எல்லாம் வேணாம் டி. நான் என் ஃபிரண்ட்ஸ்கிட்ட சொல்லி வச்சிருக்கேன். இன்னும் ஒரு வாரத்துல எப்படியும் ஒரு வேலை கெடச்சிடும். இந்த பேய் ஓட்ற வேலையெல்லாம் வேணாம் டி..” என கெஞ்சினாள்.
“இங்க பாரு இந்த வேலைல தான் யாரும் என்கிட்ட வர்றதே இல்ல. முக்கியமா பொம்பளைங்க தான் அதிகம் வருவாங்க. இன்னொன்னு நம்ம எந்த முதலீடும் பெருசா போடவேணாம். நாலு கதை கட்டி பத்து பேர பேசவச்சா போதும். நம்மளும் ஒண்ணு ரெண்டு வேலை கத்துகிட்டு அந்த கோவிலுக்கு போ இந்த கோவிலுக்கு போன்னு டைவர்ட் பண்ணிவிட்டுட்டா போதும். அதுக்கு இந்த நெட்வொர்க் ரொம்ப ஹெல்ப் பண்ணும் டி.. நீ ஒண்ணும் பயப்படாத.. நீயாவது இந்த வேலை வச்சி மேல மேலன்னு போக பாரு. எனக்கு தெரியும் நான் பண்றது தப்பு தான். ஆனா இதுல ரிஸ்க் கம்மி, பணமும் ஓரளவு வரும். நாளபின்ன நாங்க உன்கிட்ட வந்து நிப்போம். கொஞ்ச நாள் இது செஞ்சி பணம் சேத்திட்டா போதும்.” என பேசிப் பேசி அஞ்சலியை அரைமனதாக தலையாட்ட வைத்திருந்தாள்.
“எப்ப போகணும்?” நம்பி கேட்டான்.
“நாளைக்கு காலைல கிளாஸ் ஆரம்பிக்குது. ராத்திரி டிரைன் ஏறினா பக்கத்துல இருக்க டவுனுக்கு போயிடலாம். காலைல 8 மணிக்கு அவங்களே நம்ம இருக்க இடம் வந்து கூட்டிட்டு போவாங்கலாம்.. ரெண்டு செட் துணி மட்டும் எடுத்துக்க. கைல கொஞ்சம் பணம் வச்சிட்டு மீதி அஞ்சலி கைல குடுத்துடு.” என தன் கையில் இருந்த பணத்தை அவனிடம் கொடுத்தாள்.
“நாப்பது ஆயிரம் இருக்கு. எனக்கு 5 ஆயிரம் போதும். மீதி போஸ்ட் ஆபீஸ்ல போட்டுரு அஞ்சலி..” என நம்பி அவளிடம் கொடுத்தான்.
“நீ இங்கயே இருக்க போறியா?” என மீண்டும் இனன்யா கேட்டாள்.
“ஆமா.. “ என முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே சென்றாள்.
“இவள வச்சிட்டு ஒண்ணுமே பண்ணமுடியாது. எப்படி டா இவ இப்படி இருக்கா?”
“எல்லாம் உங்கப்பாவோட வளர்ப்பு தான். அவரு தான் எப்போ பாரு நீதி நேர்மை நியாயம்னு பேசிக்கிட்டு இருப்பாரு..” என நம்பி சிரிப்புடன் கூறினான்.
“அப்டி பேசி பேசி தான் அவரு இந்த நிலமைக்கு வந்தாரு..” என அவள் பழைய நினைவுகளில் சில நொடிகள் இலயித்து சுயம் மீண்டு அவனிடம் மற்ற விஷயங்களைத் தெளிவாக பேசிக்கொண்டு இரயில் நிலையம் புறப்பட்டனர்.

