94 – ருத்ராதித்யன்
“அன்னையின் ஆசி பரிபூரணமாக கிடைத்துவிட்டது இளவரசே.. இனி தாங்கள் விரைவாக பயணத்தை முடித்து கோட்டைக்கு வாருங்கள். மற்றதை அங்கே சந்திப்போம்..” எனக் கூறிவிட்டு நரசிம்மனை வணங்கி விடைக் கேட்டான்.
நரசிம்மன் அவனை இறுக்கி அணைத்து, “இளவலாரே.. தங்களின் நிலைப்பற்றி யாது உரைப்பது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த பயணம் ஆரம்பித்த நொடியில் இருந்து நானும் மகதனும் கண்டு வரும் அனுபவங்கள் சாதரணமானதாக இல்லை என்று மட்டுமே எண்ணி வந்தேன். ஆனால் நீங்கள் அனைவரும் அங்கிருந்தே இத்தனை விஷயங்களை கிரகித்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும், மற்றொரு பக்கம் எனக்கு பெரும் வருத்தத்தை தான் கொடுக்கிறது. இனி நமது வாழ்வு சாதாரணமாக இருக்காது அல்லவா?”
அமரபுசங்கன் நரசிம்மனின் கருவிழியைத் தாண்டி உள்ளே இருக்கும் எண்ணங்களை படித்தான். அத்தனை காலம் வரையில் குருகுலத்தில் பயின்ற அனைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாக நாட்டில் செயல்படுத்தி, நாட்டையும் மக்களையும் வளமாக பார்த்துக் கொள்ளும் எண்ணமும், ஆசையும் மட்டுமே கொண்டிருந்தவனுக்கு பெரும் பொறுப்பு கைகளில் கொடுத்ததும், விளையாடும் பிள்ளையை பிடித்து, அரசாளும்படி அரியணை ஏற்றியதைப் போல அவன் நெஞ்சம் விம்முகிறது.
அவனுக்கும் தெரியும் இனி அவர்கள் யாருமே சாதாரண வாழ்வு வாழமுடியாது. ஆனால் இது பிரபஞ்சத்தின் பெரும் பொறுப்பு, அதில் இவர்கள் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார்கள் என்றால் அவர்களின் ஆத்ம வன்மையை உணரத் தொடங்கவேண்டும். இப்பிறவி இதற்காக தான் என்பதும் புரிந்து அதற்கேற்ப தங்களை மாற்றி வலுவேற்றிக் கொள்ளவேண்டும். இந்த வருத்தம் தொடரக்கூடாது.
“நரசிம்மா.. நீ சிறுவயது முதலே இந்த நாட்டினையும், மக்களையும், அடவிவாழ் உயிரினங்கள் மேலும் அதீத பற்றும், அவர்களுக்கு நன்மைகள் பல செய்யவேண்டும் என்று கூறிக்கொண்டே இருப்பாய். நீ இப்போது கற்றிருக்கும் அத்தனை கலைகளும் அதன் தொடர்ச்சி தான். நீ உயிரினங்கள் வரை யோசித்தாய், ஆனால் இந்த பிரபஞ்சம் இப்பூமியின் இயற்கையைக் கூட நீயே பாதுகாத்து வளமாக்க சொல்கிறது. இது உனது ஆசையின் நீட்சி. இதை உளமாற ஏற்றுக் கொள். உன் எண்ணம் பிரபஞ்சத்தை உனக்கு உதவ வைத்திருக்கிறது. இனி இதுபோன்ற வருத்தம் தேவையில்லை. உன் மனதை ஒருநிலைப்படுத்து, உனக்கான வேலைகள் உனது மனக்கண்ணில் வரும். அதை தெளிவாக செயல்படுத்து. நாம் விரைவில் சந்திப்போம். இந்த கஜயாளியை உன்னுடனே அழைத்து வா நமது கோட்டைக்கு. உன் யாளிப்படை ஆசையும் நிறைவேறப்போகிறது.” என அவனை ஆரத்தழுவி விடைப்பெற்றான்.
மகதனும் அவன் மேல விழுந்து முகம் முழுதும் நாவல் நக்கி தனது அன்பைப் பகிர்ந்து விடைக் கொடுத்தான். அமரன் அந்த வாலிப கஜயாளி அருகே சென்று அதன் துதிக்கையை தொட்டான். மெல்ல காற்றினில் அதன் கண்கள் இருக்கும உயரத்திற்கு மிதந்து நின்று, “உனது பயணமும் தொடங்கிவிட்டது. இவனுடனே தான் இனி நம் அனைவரின் பயணமும் தொடர்ந்து செல்லும். உனக்கொரு பெயர் வைக்கலாமா?” என யோசனையுடன் கூறியவன் நரசிம்மனைப் பார்த்தான்.
“ருத்ர விக்னன்.. ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன்.” என நரசிம்மன் கூறிவிட்டு தாயின் கழுத்தில் இருந்த மலர் மாலையை எடுத்து அந்த கஜயாளி கழுத்தில் போட்டான்.
அந்த மாலையை அந்த யாளி முழுதாக தனது வாயிற்குள் போட்டுக் கொண்டு பெரும் பிளிறலை வெளியிட்டது. அதில் அந்த மலையே அதிர்ந்தது.
“நல்ல பெயர்.. இளவரசியை மிகவும் தேடுகிறாய் போலவே நரசிம்மா.. முதல் பெயர் அவருடையது. முதல் அடியும் அவருடையது என்றால் மற்றதை நீ பார்த்து கொள்வாய் என்பது எனக்கு புரிந்துவிட்டது. சரி விரைவாக கோட்டைக்கு வந்துவிடு. அங்கே சந்திப்போம்.” எனக் கூறி நரசிம்மன் அங்கிருந்து காற்றாய் கலந்து பறந்து சென்றான்.
நொடிக்கும் குறைவான நேரத்தில் அங்கிருந்து பறந்து சென்றவனைக் கண்டு நரசிம்மன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டுவிட்டு மகதன் அருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.
யாளியும் மண்ணில் அமர்ந்து நரசிம்மனைத் துதிக்கையினால் தொட்டது. நரசிம்மன் இருவருக்கும் நடுவே படுத்துக் கொண்டான். பெரும் தூக்கம் அவனது கண்களை ஆட்கொண்டது.
மகதனும் யாளியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு அவனை பாதுகாக்க தொடங்கினர். கிட்டதட்ட இரண்டு ஜாமங்கள் உறங்கினான். அதன்பின் எழுந்தவனுக்கு யாளியே வேண்டியதை தேடிக் கொண்டு வந்து கொடுத்தது. விடிய மூன்று நாழிகைகள் இருக்கும் நேரத்தில் மீண்டும் தேவியை வணங்கி மூவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
யாளிக் கூட்டம் இருக்குமிடம் செல்ல நரசிம்மன் கூற, யாளியே அவனுக்கு பதிலாக அந்த கூட்ட தலைவனிடம் கூறிவிட்டதாக ஒலி மூலமாக கூறியது.
ஆனாலும் நரசிம்மன் முறையாக கூறி விடைபெறவேண்டும் என்று கூறவும் யாளி மறுபேச்சின்றி அங்கே அவனை அழைத்து சென்றது.
ஒலி மூலமாக அவர்களின் சம்பாஷணை சில நிமிடங்கள் நீண்டது. அதில் பல விஷயங்களை யாளியிடம் அவன் கற்றுக் கொண்டான். முக்கியமான ஓர் வேண்டுகோளும் அந்த கூட்டத்தலைவனிடம் வைத்துவிட்டு அங்கிருந்து மேற்கு பக்கம் பயணத்தை தொடர்ந்தான். மகதனும் யாளியின் மேலே படுத்துக் கொள்ள, ஒரே நாளில் மேற்கு பகுதியில் இருக்கும் ஆனைக்காடு வந்து சேர்ந்தனர். அங்கே பாறைகளுக்கு இடையில் தேவி அமர்ந்திருக்கிறாள். சூரியன் மேற்கே மறைவதைப் போல இவளும் பாறைகளுக்கு இடையே மறைந்திருந்து அந்த இடத்தை ஆட்சி செய்கிறாள்.
இங்கே தான் நரசிம்மனுக்கும், மகதனுக்கும் மிகப்பெரிய பரிட்சை இருக்கிறது. அந்த இடமானது மலைகளுக்கு நடுவே அமைந்திருந்தது. சரியாக ஆதிக்கோட்டைக்கும் அமரக்கோட்டைக்கும் இடையில் இந்த நிலபரப்பு அமைந்திருக்கிறது. நான்கு புறமும் மலைகள் தான் சுழல் போல அமைந்திருந்தன. எங்கு பார்த்தாலும் மலைகளும், குன்றுகளுமாக கண்ணில் பட்டது.
மகதன் முதுகில் இருந்தபடி அழுத்தம் கொடுக்கவும், ருத்ரவிக்னன் கடலை அடுத்து தொடங்கும் மலையின் மீதேறினான். ஒரு நாழிகைக்கும் குறைவாக அவன் உச்சியில் நின்று சுற்றிலும் பார்த்தான். யாளிக்கும் இது ஓர் புதுவனுபவம். யாரும் எதிர்பாராத வகையில் நரசிம்மனுடன் யாளியும் இணைந்துவிட்டது. இந்த மலர் சேகரிக்கும் பயணத்திலேயே யாளியும் சேர்ந்தது நரசிம்மனும் எதிர்பார்க்காத ஒன்று தான். இப்போது யாளிகள் இருக்கும் இடங்களை பார்த்துக் கொண்டு பின்னர் வந்து யாளிகளை தன்வசப்படுத்தத்தான் அவன் எண்ணியிருந்தான். இது அவனுக்கும் எதிர்பாராத சந்தோஷத்தை கொடுத்தது. உடன் அமரபுசங்கன் நினைவு எழுந்ததும் மனதில் வலியும் எடுத்தது. அன்னை அவனுக்கு பெண் பார்க்கத் தொடங்கியிருந்தார். இனி அவன் இல்லறத்தில் ஈடுபடமுடியுமா முடியாத என்பதும் தெரியவில்லை. விரைவாக கோட்டை சென்று அங்கு நடப்பவற்றை அறிந்துக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் அவனுள் பெருக்கெடுத்தது.
“தாயே.. இங்கே தங்களின் தரிசனம் விரைவில் கிடைக்க அருள் செய்யவேண்டும்..” என அவன் வாய்விட்டு கூறியநொடி அன்னை அவள் குறும்பு சிரிப்பு தான் சூடிக்கொண்டாள்.
மகதன் அவனின் சொற்களை கேட்டுவிட்டு யாளியின் மீதே மீண்டும் படுத்துக் கொண்டான். யாளி மகதனின் செய்கைக்கு அர்த்தம் புரியாமல் மகதனை துதிக்கையினால் எழுப்பியது.
“உர்..” என மகதன் அதனை தள்ளிவிட்டு படுத்துக் கொண்டான். ஓர் மலையின் மேலே படுத்துக் கொண்டு அங்கிருக்கும் மலைகளை பார்ப்பது போல அந்த காட்சி அத்தனை ரம்யமாக இருந்தது. நரசிம்மன் நடந்து வந்திருந்தால் நிச்சயம் இப்படி ஓர் காட்சி அவனது கண்களுக்கு விருந்தாக கிட்டியிருக்காது.
யாளியின் மேலே நிற்பதால் மரங்களின் முக்கால் உயரத்தை தாண்டிய யாளியின் மேல் நின்று பார்க்க மலைகளுக்கு மேலே மிதக்கும் மேகமும், குளிரும் அவனுடலில் நேரடியாக மோதி சென்றது. அதில் அவன் உடல் சிலிர்த்து மகதனை எழுந்து நின்று பார்க்க கூறினான். மகதனும் அந்த காட்சியைக் கண்டு கண்கள் மின்ன ஓர் குறிப்பிட்ட திசையினை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பச்சை கண்களுக்கு அங்கே சிறப்பான தரிசனம் கிட்டியது. இனி நரசிம்மன் என்ன செய்வான் என்பதைக் காண வேண்டும். மகதனும் அந்த பரிட்சையில் வெல்ல வேண்டும்.
“மகதா.. முதலில் குளித்துவிடுவோம். இங்கே தேவியை கண்டுபிடிப்பது தான் பெரும் சவால். கண்களை கூர்மையாக வைத்துக் கொள். புலன்களை நன்றாக உபயோகித்து தான் இங்கே தரிசனம் காண முடியும். உடலின் அத்தனை பாகங்களும் இங்கே வேலை செய்யவேண்டும், மகாராஜா இங்கே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார். அவரின் வாயில் இப்படி ஒரு வார்த்தை இந்த குறிப்பிட்ட இடத்திற்காக தான் இத்தனை ஆண்டுகளில் கேட்டு இருக்கிறேன்.” என நரசிம்மன் கூறிய நொடி நிலம் அதிரத் துவங்கியது.
யாளியும் கூட ஓர் நொடி பதற்றம் கொண்டு பின் அந்த நிலத்தின் தன்மையை உள்வாங்கி உணரத்தொடங்கியது. சந்தோஷ பிளிறல் கூட வெளியிட்டது.
நரசிம்மன் அந்த மலையில் இருந்த அருவியில் குளித்துவிட்டு மலர்களை சேகரிக்கத் தொடங்கினான். மகதனும் தன் வேட்டையை அங்கே முடித்துக் கொண்டு தன்னை சுத்தம் செய்து கொண்டான். யாளி அதற்கு தேவையான உணவை தேடி சென்றது. நரசிம்மனுக்கு மட்டும் பசி உணர்வு இங்கே எழவில்லை.
ஆனாலும் உடலும் துவழவில்லை. அதை சிந்தித்தபடி அவன் கருப்பு நிறம் இல்லாத மலர்களை சேகரித்தபடி அந்த அடுக்குப்பாறைகளின் நடுவே வந்தான். அங்கே பீடம் மட்டுமே இருக்க தேவியைக் காணவில்லை.
நரசிம்மனுக்கு மகாராஜாவின் வார்த்தைக்கு பொருள் புரியத்தொடங்கியது. காதும், கண்ணும், காலுக்கு கீழிருக்கும் நிலத்தின் அதிர்வுகளும், நாசிக்கு வாசனையும், காற்றில் இருக்கும் ஈரப்பதம் உணர உடலில் இருக்கும் மேல்தோலும் கூட விழித்து செயல்படவேண்டும்.
மற்ற இடங்களில் தேவியின் சிலைகள் இருக்குமிடத்திலேயே தான் இருக்கும். மீண்டும் அவர்களது வாழ்நாளில் என்று வேண்டுமானாலும் சென்று தரிசிக்கலாம். ஆனால் இங்கே ஆனைக்காட்டில் தேவியில் உருவம் ஓரிடத்தில் காணப்படமாட்டாது.
திருவுருவமானது எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இடம் மாறிக்கொண்டே இருக்கும். ஒரு சமயம் பாறைகளுக்கு மேலே இருப்பாள், மற்றொரு சமயம் பாறைகளுக்கு நடுவே இருப்பாள், இன்னும் சில சமயங்களில் நிலத்திற்கு அடியே கூட சென்று மறைந்திருப்பாள். சுருக்கமாக கூறினால் அவள் நினைத்தால் மட்டுமே அவளைக் காணமுடியும்.
இந்த தேடலில் அவர்கள் அவளது மனதையும் குளிர்விக்கவேண்டும், அவளது ஆசியையும் பெறவேண்டும். இங்கிருப்பவள் ஓர் குறும்புக்கார சிறுக்குழந்தை. துரத்த ஆரம்பித்தால் ஓடிக் கொண்டே இருப்பாள்.
இதோ நரசிம்மன் கண்முன்னே தேவியின் திருவுருவம் தென்படுகிறது. அவன் ஆர்வமாக முன்னே காலெடுத்து வைக்கும்போது அப்படியே மாயமாக மறைந்தது.
நரசிம்மன் அந்த நிகழ்வில் சுதாரித்தான். மகதன் இப்போது நரசிம்மனுக்கு உறுதுணையாக அவனுக்கு முன் வந்து நின்றான். ருத்ரவிக்னன் அமைதியாக ஒரு பக்கம் சென்று நின்றான்.
மீண்டும் தேவியின் திருவுருவம் சயன கோலத்தில் கண்களுக்கு தெரிந்தது..

