105 – ருத்ராதித்யன்
“அருமையான பெயர்.. எனது பெயர் நரசிம்ம யோகேந்திர ஆதித்யன். இவர் அமரக்கோட்டையின் அரசர் அமரபுசங்கர், இவர் ஆருத்ரா சிங்கமாதேவி. எங்களின் அடையாளம் மட்டுமே எல்லையில் கூறினோம்.”
“நல்லது யுவராஜரே.. தாங்கள் அவனை பிடித்துவிட்டீர்களா?” என தலைவியார் கேட்டார்.
“இல்லை. ஆனால் யாராக இருக்கும் என்கிற யூகம் இருக்கிறது..” என அமரன் கூறினான்.
“விஸ்வக்கோட்டையை சேர்ந்தவனாக தான் இருக்க வேண்டும். அவர்கள் தான் சில வருடங்களாக முதல் துளியை எடுக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.” என மாறவல்லன் கூறினான்.
“எத்தனை வருடங்களாக முயல்கிறார்கள் மாறவல்லரே?”
“கடந்த 5 ஆண்டுகளாக அவர்களின் ஆட்கள் தான் இங்கே அதிகம் வந்தனர். அவர்களால் முதல் துளியை எடுக்க முடியாமல் இங்கே அடைபட நேர்ந்தால், நஞ்சை உண்டு தன்னை தானே மாய்த்தும் கொள்கின்றனர். இதுவரை 68 பேர் இங்கே வந்து இறந்து உள்ளனர். அனைவரும் விஸ்வக் கோட்டையை சேர்ந்தவர்கள் தான்.”
“அதுமட்டுமல்ல, இது போன்ற திருட்டும் செய்ய முயன்று கொண்டு தானிருக்கின்றனர். சிலர் மாயாஜாலத்தில் இதை நடத்திவிடலாம் என்றும் வந்திருக்கிறார்கள். ஆனால் முதல் துளிக்கு உயிர் கொடுப்பதென்பது அத்தனை எளிதும் அல்ல, கஷ்டமும் அல்ல. அது வனதேவியின் பூரண அருளும், அதை அவர்கள் உபயோகப்படுத்த போகிற செயலின் நோக்கமுமே அத்துளிக்கு ஒளி கொடுக்கும். இப்போது கூட அந்த துளி உங்கள் இளவரசியாரின் கைகளில் தான் இருக்கிறது. அவரின் கைகளிலிருந்து அதை எடுக்கவும் முடியாது, அதை உடைக்கவும் முடியாது. அத்தனை பாதுகாப்பாக இந்த நிலையிலும் அதை அவர் பொத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் நோக்கம் மட்டுமின்றி அவருக்கு தெய்வ அருளும் நிரம்பி இருக்கிறது. இவர் நல்ல புத்திசாலி, தைரியசாலி மட்டுமின்றி சாமர்த்தியசாலியும் கூட.. தியானத்தில் அமரும் முன்னே அவர் என்னிடம் பேசிய யாவும் அறிவுத்தேடலாக தான் இருந்தது. எனக்கும் அவரை மிகவும் பிடித்துவிட்டது.. இவரை நானே உடனிருந்து பாதுகாக்க எண்ணிக் கொண்டிருந்தேன்.” என தலைவி கண்மயா கூறியதும் அனைவரும் ஆச்சரியத்தோடு அவரை பார்க்க, மாறவல்லன் மட்டும் அதிர்வோடு பார்த்தான்.
“தேவி.. இது.. வேண்டாம்.. நீ..” என வார்த்தை கோர்வையின்றி வந்துக் கொண்டிருந்தது.
“மனம் பதறவேண்டாம். அதற்கான முடிவை நான் எடுக்கவில்லை. அவளை பாதுகாக்க நமது புதல்வனை அனுப்புகிறேன். நானிலன் இதற்கு சரியாக இருப்பான் அல்லவா?” எனக் கேட்டுப் புன்னகைப் புரிந்தார்.
“நிச்சயமாக.. அவனின் துறுதுறுப்பிற்கும், இளவரசியாரின் சுறுசுறுப்பிற்கும் சரியாகத்தான் இருக்கும். சில நொடிகள் என்னை பதறவைத்து விட்டாய் நீ.. யாரங்கே நானிலனை உடனடியாக வரச்சொல்..” என வீரனுக்கு கட்டளையிட்டார்.
ஐவரும் பேசியபடியே உணவை உண்டு முடித்து அந்த குடிலுக்கு வெளியிலேயே படுத்தனர். ஆருத்ராவும், கண்மயாவும் வனயாத்திரையை ஒருமுறை உள்ளே சென்று பார்த்துவிட்டு முன்கட்டில் படுத்துக் கொண்டனர். ஆண்கள் மூவரும் வெளித் திண்ணையில் படுத்துக் கொண்டு அந்த காட்டினைப் பற்றி தீவிரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
நடுசாம வேலையில் அரூபமாக அகோரி ஒருவன் அந்த எல்லையில் வந்து நின்றான். அவனை கண்ட எல்லை தெய்வம் அவனைத் திரும்பி செல்ல கூறியது. அதன் சக்தியைக் கட்டிவிட்டு அவன் உள்ளே நுழைந்த நொடி வனயாத்திரை கண்விழித்து மென்னகைக் கொண்டாள்.
அவளது மெய்யுடல் குடிளுக்குள் இருந்தது ஆனால் அவளின் ஆத்மா வெளியே வந்து அந்த அகோரியின் முன்னே நின்றது. அவளின் ஆத்ம சக்தியின் அளவை கணக்கிடமுடியாமல் அந்த அகோரி சில நொடிகள் தயங்கி நின்றான்.
“இங்கு என்ன வேலை உங்களுக்கு அகோரியே?” என திடமாக அவரின் முன்னே நின்றுக் கேட்டாள்.
“எனக்கான ஒன்றை எடுத்து செல்ல வந்தேன். நீ வழிவிட்டு நில்..” அதட்டலாகவே பதில் வந்தது.
“உங்களுக்கான ஒன்றா? தாமே பற்றுகள் அனைத்தும் துறந்து உங்களின் தவவலிமையினையும் கூட துறந்து தானே அகோரியாக வாழ்ந்து வருகிறீர்? பின்னர் தங்களுடையது என்று எப்படி வரும்?” வனயாத்திரை மெல்ல மெல்ல அந்த அகோரியை நெருங்கி அவரின் உடலை தொட வந்தாள்.
“அங்கேயே நில்.. எனை தொட எத்தனிக்காதே.. நீ இப்போது தான் உனது ஆத்மாவினை பிளந்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறாய். உனது ஆத்மா இப்போது பலகீனமாக இருக்கிறது.”
“ஹாஹாஹாஹா.. நல்ல நகைச்சுவை.. அபராஜிதனையும் இப்படி தான் பொய்கள் பல கூறி தங்கள் கூட்டத்திற்கு தேவையானவற்றை பெற்றுக் கொண்டிருக்கிறீர்களா ?” என பேசியபடியே அகோரியின் உடல் தொட்டதும் அரசகேசரியின் உருவம் அங்கே தெரிந்தது.
“தமது தோழர் மட்டுமே மந்திரங்கள் கற்றதாக நான் நினைத்தேன் தாங்களும் உருமாறும் வல்லமை பெருமளவிற்கு மந்திரங்கள் கற்று வந்திருக்கிறீர் விஸ்வக் கோட்டை அரசே..” என வனயத்திரை அவன் பெயர் கூறியதும் அமரன் அடுத்த நொடி அங்கே வந்து நின்றான்.
அமரன் அவனை கண்டதும் கழுத்தை நெருக்கி அவனை மேலே தூக்கி பறந்தான். நரசிம்மன் அமரன் எழுந்ததும் அரவம் உணர்ந்து தானும் எழுந்தான். அப்படியே ஒவ்வொருவராக எழுந்து விட காவலுக்கு நின்ற காவலர்களில் வனதேவியின் அருளை பரிபூரணமாக பெற்றவர்கள் மட்டுமே மயக்கம் தெளிந்து உடனடியாக எழுந்து அங்கே வந்தனர்.
கண்மயாவும், ஆருத்ராவும் வனயாத்திரை இருக்குமிடம் சென்று அவளைச் சுற்றி அரணாக நின்றனர்.
அரசகேசரி அவர்களிடம் சிக்கிக்கொண்ட கோபத்திலும், ஆருத்ராவை நெருங்கமுடியாமல் போன ஏமாற்றத்திலும் தன்னை தானே மனதிற்குள் கடிந்தபடி அமரனிடம் இருந்து தப்பிக்கும் மார்கத்தை சிந்திக்கத் தொடங்கினான்.
அபராஜிதன் அவனுடன் அவன் வளர்க்கும் பாம்பு குட்டி ஒன்றையும் எடுத்து செல்லும்படி கூறியதால் அதனை உள்கச்சையில் வைத்திருந்தான். அதனை எடுத்து அமரன் முகத்தினில் கடிக்க வைத்தான்.
அதில் நிலை தடுமாறிய அமரன் சில நொடிகள் தனது கைப்பிடியை தளரவிட்ட நேரத்தில் அரசகேசரி புகையாக மறைந்து போனான்.
அமரனின் கன்னத்தில் கடித்த பாம்புக்குட்டி அவனது கன்னத்தில் தனது பற்கள் மாட்டிக்கொண்டதால் தப்பிக்கமுடியாமல் நெளிந்து கொண்டே இருந்தது. அந்த பாம்பின் விஷம் உடலில் ஏற தொடங்கியதும் அமரனுக்கு மயக்கம் வரத் தொடங்கியது. வேகமாக தரை தொட வந்தவன், நிலம் தொட்டதும் நரசிம்மன் தோளில் சாய்ந்து விழுந்தான்.
வனயாத்திரை ஆத்ம ரூபத்தில் எல்லை தெய்வம் கோவிலுக்குள் சென்று அந்த தெய்வத்தின் பாதம் தொட, அரசகேசரியால் தற்காலிகமாக போடப்பட்டிருந்த மந்திரக்கட்டும் செயல் இழந்து போனது.
நொடியில் தன்னுடல் புகுந்து எழுந்து அமரன் இருக்குமிடம் வந்து நின்றாள். ஆடைகள் களைந்து அவள் அங்கே வந்து நின்றதும் ஆண்கள் அனைவரும் தலை கவிழ்ந்து வேறு பக்கமாக திரும்பி நின்றனர். ஆருத்ரா அவள் பின்னோடு வந்து அவளின் மேல் போர்வையை சுற்றி விட்டாள்.
கண்மயா பாம்பு கடிக்கு மருந்து கொண்டு வந்து அமரன் கன்னத்தில் சிக்கியிருந்த பாம்பினை கொல்லாமல் மெல்ல மெல்ல எடுத்தாள். அதனை நரசிம்மன் தனது கைகளில் வாங்கி சுற்றிலும் திருப்பி திருப்பி பார்த்தான்.
அதன் உடல் அமைப்பும், நிறமும் அவன் நதித்தீவில் கண்ட “கருஞ்சி” பாம்பின் இனத்தை ஒத்து இருந்தது. சிவநேசனை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பாம்பிடம் பேச முடிவெடுத்தான்.
“நீ கருஞ்சி இனத்தை சேர்த்தவனா குட்டி அரவமே..?” என பாம்பு மொழியில் பேச ஆரம்பித்தான்.
“ஆம்.. நான் வடக்கு பக்கமிருக்கும் மலை காடுகளில் பிறந்தேன்.. நாங்கள் மொத்தம் 15 பேர் அன்று பிறந்தோம். நாங்கள் பிறந்த சில நிமிடங்களில் எங்களின் கூட்டத்தை கொன்று விட்டு எங்களையும் எங்கள் தாயையும் கடத்திச் சென்று ஓர் உயர்ந்த மலையில் வைத்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு ஓர் அரண்மனைக்கு என்னுடன் பிறந்த சிலரோடு கொண்டு வரப்பட்டோம். தினமும் அவனின் உதிரம் குடித்து அவனுக்கு அடிமையாக வாழ எங்களை பழக்கி வந்தனர். இப்போது இவரை கடித்து இவரின் உதிரம் குடித்ததால் இனி இவருக்கு நான் அடிமையாக வாழ்வேன்..” என நரசிம்மன் கைகளில் நெளிந்தபடியே தனக்கு தெரிந்தவற்றை கூறி முடித்தது.
“இங்கு யாரும் யாருக்கும் அடிமையாக வாழவேண்டிய அவசியம் இல்லை குட்டி பாம்பே..” என அமரபுசங்கன் கூறியபடி அங்கே வந்தான்.
“ஆம்.. உங்கள் கூட்டதவர்கள் இருக்குமிடம் கூறு உனை அங்கே விட்டு விடுகிறோம்..” என ஆருத்ரா கூறினாள்.
அவர்கள் மூவரும் தன் மொழி பேசுவது கண்டு பாம்பு மூவரையும் மாறி மாறி முகம் பார்த்தது.
“என்ன பார்க்கிறாய்? நாங்கள் உன் மொழியில் பேசுவதை கண்டு ஆச்சரியம் கொண்டாயா?” என ஆருத்ரா கேட்டாள்.
“ஆமாம்.. எங்களை அடிமைப்படுத்த முனைந்தவர்கள் கூட எங்களின் மொழியை பேசவில்லை நீங்கள் மூவரும் பேசுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது..”
“இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை குட்டியே.. நாங்கள் மற்ற உயிர்களுடன் உறவு கொண்டாட நினைப்பதால் அவர்களின் மொழியை கற்றுக் கொண்டோம். அவர்கள் உங்களை அடிமை படுத்த மட்டுமே எண்ணியதால் அதை செய்ய முனையவில்லை.. நீ சற்று முன்பு கூறியது போல இனி நீ எங்கள் தமையனாரின் அடிமையாக இருப்பாயா? உனை நம்பலாமா?” எனக் கேட்டபடி அங்கே வனயாத்திரை வந்து தனது கைகளில் அந்த குட்டியை ஏந்தினாள்.
“நிச்சயமாக நம்பலாம். எங்கள் இனம் பிறந்ததும் தேவியின் முன்னே நாங்கள் உனது அடிமைகள் என்று சாசனம் ஏற்றுக் கொள்வது எங்களது மரபு.. நாங்கள் பிறந்ததும் அவர்கள் எங்களை தூக்கி சென்றதால் அவர்களிடம் அடிமைகளாக வளர்க்கப்பட்டோம். தெய்வத்தை அன்றி வேறு யாரிடம் நாங்கள் அடிமைகளாக இருந்தாலும் மற்றவர் உதிரம் குடித்தால் அவருக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு இடப்பட்ட கட்டளை..”
“நல்லது.. நீ பத்திரமாக அவரின் கச்சையில் உறங்கு. நாம் பின்னர் பேசுவோம்..” எனக் கூறியபடி வனயாத்திரை அமரனின் இடை கச்சையில் அந்த பாம்பு குட்டியினை உள்ளே விட்டு கட்டி அவனது இடையிலும் கட்டிவிட்டாள்.
“என்ன செய்கிறாய் யாத்திரை?” ஆருத்ரா கேட்டாள்.
“நாம் உடனடியாக கிளம்பவேண்டும் அக்கா.. நாம் நினைத்ததை விட அவர்கள் மிகவும் பலம் பெற்று இருக்கிறார்கள். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நமது காடுகளும், நமது அடவிவாழ் உயிரினங்களும் அதீதமாக உயிர் சேதமடையும். நீ முதலில் பாதுகாக்கப்படவேண்டும். உடனடியாக உங்கள் இருவருக்கும் திருமணம் முடிக்க வேண்டும்..” என படபடவென கூறியபடி கண்மயா அருகே வந்து நின்றாள்.
“எனை காப்பாற்றியதற்கு நான் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களுக்கு கடமைப்பட்டு இருப்பேன். எனை சுயநலவாதி என்று நீங்கள் நினைத்தாலும் பரவாயில்லை. உங்களிடம் சில வரங்களும், வேலைகளும் எனக்கு ஆக வேண்டும். தாம் எனது ஆராய்ச்சி கூடம் வந்து எனது ஆராய்ச்சி வெற்றி பெற உதவ வேண்டும். உங்களை நான் ஐந்தாம் நாள் காலை அங்கே எதிர்பார்த்து காத்திருப்பேன். மற்றதை நேரில் பேசி கொள்ளலாம். நாங்கள் உடனடியாக கிளம்பவேண்டும். வருகிறோம்..” என அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு குடில் சென்று தனது பொருட்களை எடுத்துக் கொண்டு வந்தாள்.
மற்ற மூவரும் அவளின் செயல் புரிந்தும் புரியாமல் அவளுடன் பிரயாணம் செய்ய ஆயுத்தமானார்கள்.
யாளியின் மேலே நால்வரும் அமர்ந்ததும் ருத்ரவிக்னன் அதிவேகமாக ருத்ரக் கோட்டை நோக்கி சென்றான்.
“ஏன் அங்கே இப்போது செல்ல வேண்டும்? அரசரை கண்டபின் செல்லலாம் தானே?” ஆருத்ரா கேட்டாள்.
வனயாத்திரை பதில் ஏதும் பேசாமல் ஆருத்ராவின் கண்களை ஆழமாக பார்த்தாள். அதே சமயத்தில் ருத்ரா கோட்டை ஆராய்ச்சி கூடத்தில் அபராஜிதன் உருமாறி வனயட்சியை வசியம் செய்ய வந்துக் கொண்டிருந்தான்.
இனி வனயட்சியின் செயல்கள் யாவும்….

