91 – ருத்ராதித்யன்
அப்போது ஓர் மானை வேட்டையாடியுண்டு, இரத்தம் சொட்டும் முகத்துடன் நரசிம்மன் பின்னே வந்து நின்றான் மகதன்.
நரசிம்மன் அவனைக் கண்டதும் தாவி விழுந்து மகதன் முகம் முழுதும் முத்தம் கொடுத்து தன் மனம் சுமந்திருந்த வலியினை மகதன் மேல் படுத்தபடி இறக்கிக் கொண்டிருந்தான்.
மகதன் அவனது அதீத இதயத்துடிப்பை உணர்ந்து அவனுக்கு உடலைக் கொடுத்து, தலையை அவன் கைகளுக்கு வாகாக வைத்துப் படுத்துக் கொண்டான்.
சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நரசிம்மன் மகதன் மேல் இருந்து எழுந்து நின்றான்.
“ஏனடா இப்படி செய்தாய்? உன் காலடி அந்த குழியின் முன் இருப்பது கண்டு எத்தனை வேதனை கொண்டேன் தெரியுமா? நீ தான் உள்ளே விழுந்து விட்டாயோ என்று நானும் உள்ளே குதித்து உன் கால் கிடைத்தது என்று பலம் மொத்தம் திரட்டி வெளியே இழுத்து வந்தால், நீ நன்றாக வயிறு முட்ட உண்டுவிட்டு முகத்தை கூட கழுவாமல் வந்து என் பின்னால் நிற்கிறாய். நான் என்ன சொல்லிவிட்டு சென்றேன் உன்னிடம்?” எனத் திட்டத் தொடங்கினான்.
மகதன் சுனை இருக்கும் பக்கம் ஏதும் கூறாமல் நடக்கத் தொடங்கினான். நரசிம்மனும் அவனைத் திட்டியபடி அவன் பின்னோடு சென்று சுனையில் இறங்கி தன்னை முழுதும் சுத்தம் செய்துக் கொண்டு, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
“இனி இப்பயணம் முடியும் வரையிலும் இருவரும் ஒன்றாக தான் இருக்கவேண்டும். தனித்தனியாக செல்லவே கூடாது. நான் கூறாமல் நீ இனி எங்கும் செல்லமாட்டாய் என்று வாக்கு கொடு..” என மகதனிடம் கேட்டான்.
மகதனும் தலைத் தாழ்த்தி அவன் நெஞ்சில் முட்டி வாக்கு கொடுத்தான். அதன்பின் நரசிம்மனும் மகதன் கொண்டு வந்திருந்த மானை சுத்தம் செய்து சுட்டு சாப்பிட்டுவிட்டு, அந்த புதைக்குழியின் முன்னே வந்து நின்றான்.
அவன் மகதன் என நினைத்து இழுத்து வந்தது ஓர் கஜயாளி குட்டி. இந்த பக்கம் வந்து குழியில் மாட்டிக் கொண்டது போல. அதைத் தேடி அதன் கூட்டம் எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம்.
நரசிம்மன் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னே வந்து குழியில் விழுந்திருக்கவேண்டும். அதன் இதயத்துடிப்பை அதன் கால் பிடித்தநொடியே நரசிம்மன் கண்டுக் கொண்டிருந்தான். அதனால் நிலம் இழுத்ததும் நீர் புகட்டி முக்கிய இடங்களில் அடைத்திருந்த சகதிகளை எல்லாம் சுத்தம் செய்து, கெட்டி நிலத்தில் படுக்க வைத்து அதற்கு வேண்டிய முதழுதவிகளை முடித்துவிட்டு அவன் எழுந்து நின்றபோது தான் மகதன் அவன் பின்னே வந்து நின்றான்.
இப்போது அந்த குட்டி கஜயாளியின் கண்கள் மெல்ல மெல்ல அசைந்துக் கொண்டிருந்தது. நரசிம்மன் தன் கையில் இருந்த மூலிகைகளை வைத்து அதற்கு காயம் ஏற்பட்டிருந்த இடத்தில் எல்லாம் மருந்து வைத்து கட்டிவிட்டிருந்தான்.
இனி அது கண் முழிக்கும் வரையில் அருகே இருந்து பார்க்க வேண்டும். மீண்டும் இது வேறு எந்த புதைக்குழியிலும் விழுந்து விடாமல் பார்த்து அதன் கூட்டத்திடம் சேர்க்க வேண்டும். அதன் பிறகே தேவியின் தரிசனம் காண செல்ல வேண்டும். ஏற்கனவே மகதன் செய்த வேலையில் பாதி நாள் ஓடிவிட்டது. மீதமிருக்கும் இரண்டு ஜாம பகலும் இந்த குட்டியை அதன் கூட்டத்திடம் சேர்ப்பதில் சென்றுவிடும்.
“மகதா.. நீ இதன் அருகிலேயே இரு. வேறு எங்கும் இவன் எழுந்து ஓடாமல் பார்த்துக் கொள். நான் இதற்கு உணவும் நீரும் கொண்டு வருகிறேன்.. மரத்தின் மீதேறி இவனை தேடி யாரேனும் வருக்கிறார்களா என்றும் பார்த்துவிட்டு வருகிறேன். மீண்டும் எங்கேயும் ஓடி விடாதே..” எனக் கட்டளையிட்டு விட்டு வேகவேகமாக அதற்கு வேண்டிய பச்சை மர தண்டுகளையும், நீரையும் கொண்டு வந்து வைத்தான். நீரை மட்டும் கொஞ்சமாக வாயை திறந்து உள்ளே ஊற்றினான். இவனும், ஆருத்ராவும் இணைந்து கண்டுப்பிடித்த பனை ஓலையில் கட்டிய மூலிகைப் பொடியை இவனும் கொஞ்சம் எடுத்து வந்திருந்தான். அதை அடிப்பட்டிருந்த இடத்தில் நேரடியாக கட்டியதும், காயம் பட்டு அறுந்திருந்த சதைகள் வேகமாக வளரத் தொடங்கியிருந்தன.
இரத்தபோக்கும் உடனடியாக நின்று உயிர்போகும் அபாயத்தை கடந்திருந்தது அந்த குட்டி கஜயாளி. மகதன் அதன் கூட்டம் எந்த திக்கில் இருந்தும் வரலாம் என்பதால் குறிப்பிட்ட தூரத்தில் அமைதியாக அமர்ந்துக் கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்.
நரசிம்மன் மரத்தில் ஏறி பார்த்தபோது, அந்த புதைக்குழிகள் இருக்கும் ஒரு காத தூரத்தின் எல்லையில் தான் சில கஜயாளிகள் சத்தம் எழுப்பியபடி சுற்றிக் கொண்டிருந்தன. அவைகள் இந்த பகுதிக்குள் நுழையாமல் அங்கேயே சுற்றுவதில் நரசிம்மன் இந்த குட்டியை அங்கே சேர்க்க வேண்டும் என்று புரிந்துக் கொண்டான்.
குட்டி கஜயாளி என்பதே பாதி வளர்ந்த யானையின் உயரமும், கனமும் கொண்டு இருக்கும். நரசிம்மன் மிகவும் சிரமம் கொண்டே அதை அந்தக் குழியில் இருந்து வெளியே இழுத்து வந்திருந்தான். அதை இன்னும் ஒரு காத தூரம் இழுத்து செல்வதென்பது மிகவும் சிரமம் தான். அதுவும் அது பலத்த காயம் கொண்டு அரைமயக்கத்தில் படுத்திருக்கிறது. அதை பத்திரமாக அதன் கூட்டத்தில் சேர்க்கும் பொறுப்பு இப்பொழுது அவனுடையது.
“மகதா.. இவன் கூட்டம் இந்த புதைக்குழிகள் இருக்கும் ஒரு காத தூரத்தை கடந்து எல்லையில் அல்லாடி கொண்டிருக்கின்றன. இவனை அவர்களிடம் சேர்க்க வேண்டும். நான் இவன் கண் விழித்ததும் ஒலி எழுப்புகிறேன். அவர்களிடம் இவனை சேர்க்க வேண்டும். நீ இவனை இங்கேயே இருந்து பார்த்துக் கொள். கவனமாக இரு. வேறு பெரிய யாளிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பாக பதுங்கிக்கொள். புரிந்ததா?” எனக் கேட்டான்.
“ர்ர்..” என்ற பதில் கிடைத்ததும் நரசிம்மன் தன் இடை சுற்றி காட்டும் கச்சைகளைக் கட்டிக் கொண்டு அந்த கஜயாளிகள் இருக்கும் பகுதி நோக்கி நடந்தான்.
அந்த புதைக்குழிகளை தாண்டி ஜாக்கிரதையாக நிலத்தில் கால் வைத்து செல்ல ஒரு நாழிகைக்கும் அதிகமான நேரம் எடுத்தது. ஒரு வழியாக அந்த எல்லையில் நின்று வணக்க ஒலி எழுப்பி நிலத்தில் ஆயுதங்களின்றி கஜயாளிகள் முன் வந்து நின்றான்.
ஒலி கேட்டதும் அனைத்து யாளிகளும் அவன் முன்னால் வந்து நின்று பார்த்தன. அவைகள் ஒன்றாக நின்றதும் அடுத்தடுத்து ஒலியின் மூலமாக அவர்கள் குட்டி இருக்கும் இடமும், விஷயமும் கூறினான்.
அதைக் கேட்டதும் தாய் யாளி உணர்ச்சி மிகுதியில் அவன் முன்னால் வந்து அவனை துதிக்கையில் தூக்கி முகத்தின் அருகே வைத்து அவனை பார்த்தது. அக்கூட்டத்தின் முதுமையடைந்த யாளி வந்து அவனை மீண்டும் நிலத்தில் நிற்கவைத்து ஒலி மூலமாக அவனிடம் பேசியது.
“எங்கே இருக்கிறான்? புதைக்குழியில் இருந்து எப்படி மீட்டாய்?”
“நான் என் தோழன் புலியோடு இங்கே தேவி தரிசனம் காண வந்தேன். நீர் எடுக்க நான் சென்று திரும்பி வரும்போது அந்த புதைக்குழியின் முன்னால் என் நண்பனின் கால் தடம் கண்டு அவனை காப்பாற்ற உள்ளே இறங்கினேன். ஆனால் நான் இழுத்து வந்தது தங்கள் கூட்டத்தை சேர்ந்த குட்டியை. என் தோழன் புலி பத்திரமாக இருக்கிறான். அவனை காவலுக்கு வைத்துவிட்டு தங்களிடம் விவரம் கூறி உங்கள் குட்டியை உங்களிடம் ஒப்படைக்க வந்தேன்..” எனக் கூறி பக்கவாட்டில் யாளிகளின் அசைவுகளை கண்காணித்துக் கொண்டிருந்தான்.
பொதுவாக எந்த மிருகத்திற்கும் அதன் கண்களை நேரடியாக முதல் சந்திப்பிலேயே பார்த்தால் கோபம் வருமென்று கூறுவர். சற்று பழக ஆரம்பித்தபின் இதுபோன்ற பிரச்சனை இல்லை. ஆனால் முதல் அறிமுகம் அவர்களிடம் நாம் மிகவும் மரியாதையுடன், அவர்களை எந்த வகையிலும் துன்புறுத்த வரவில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த கண்ணோடு கண் காண்பதில்லை. அப்படி பார்த்தால் அவர்களை போருக்கு அழைப்பதாக அவைகள் எண்ணிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனால் நரசிம்மனும் நேரடியாக கண் பார்த்து பேசாமல் லேசாக தலையை தாழ்த்தி பக்கவாட்டில் கண்களை அலையவிட்டபடி ஒலியின் மூலமாக பேசினான்.
விவரம் கூறியபின் யாளிகள் கூட்டமாக அவர்களுக்குள் பேசிவிட்டு நரசிம்மனுடன் ஓர் இளமையான வலிமை மிக்க யாளி ஒன்று மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது. நரசிம்மனை அதுவே முதுகில் ஏற்றிக் கொண்டது. குருகுலத்தில் யாளியின் குணாதிசயங்கள் முதல் அவற்றை கட்டுப்படுத்துவது வரை எழுத்து வடிவில் அவனுக்கு போதிக்கப்பட்டிருந்தது. இன்று ஓர் கஜயாளியின் மேல் அவன் அமர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்ததும், கஜயாளியை கையாளும் வித்தையை அவன் செயல்படுத்தத் தொடங்கினான்.
முதலில் சிறிது முரண்டு பிடித்த யாளி நரசிம்மனின் வர்ம அழுத்தத்தில் அவனது கட்டளைக்கு அணிபணிந்து நடக்கத் தொடங்கியது. அக்கூட்டத்தின் முதுமையான யாளி அதைக் கண்டதும் மனதில் ஓர் முடிவும் எடுத்து தனது கூட்டத்திடம் விவாதிக்கத் தொடங்கியது.
கஜயாளி பத்து நிமிடங்களுக்கும் குறைவாக மகதன் இருக்கும் இடத்தினை வந்தடைந்தது. அப்போது அந்த குட்டியாளியும் மெல்ல மெல்ல கண் விழிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது.
இந்த வாலிப யாளியைக் கண்டதும் குட்டியாளி எழுந்து அதனிடம் ஓடியது. மகதன் சத்தம் எழுப்பி புதைக்குழிக்கு முன் வந்து நின்றான். புலியைக் கண்டதும் குட்டி மிரண்டு எதிர்பக்கம் ஓடத் தொடங்கியது.
உடனே வாலிப யாளி மகதனை கொல்லும் எண்ணத்துடன் காலை ஓங்கிக் கொண்டு மிதிக்க சென்றது. நரசிம்மன் இதைக் கண்டதும் தான் அமர்ந்திருந்த யாளிக்கு புலி துணைவன் என புரியவைக்க ஒலி எழுப்பினான். அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் மகதன் அதன் காலில் நசியாமல் தப்பித்து வேறுபக்கம் தாவி நின்றான்.
யாளியின் கால் நிலம் தொடுவதற்கும், மகதன் அங்கிருந்து வேறுபக்கம் தாவுவதற்கும் சரியாக இருந்தது. இல்லையென்றால் மகதனின் நிலையை நாம் சொல்லைக் கொண்டு அறிந்திட முடியாது.
“மகதா மரத்தில் ஏறி பதுங்கி இரு..” நரசிம்மன் கட்டளையிட்டுவிட்டு யாளியை வர்மத்தின் மூலம் அமைதிப்படுத்த முயன்றான்.
அந்த யாளியோ நரசிம்மனின் எந்த அழுத்தத்திற்கும் அடங்காமல், அந்த குட்டி யாளி சென்ற திசையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. நரசிம்மன் அதன் மேல் படுத்தபடி அதன் காதுகளுக்கு கேட்குமாறு ஒலி எழுப்பி அமைதிப்படுத்த முயன்றான்.
அந்த நிலத்தின் எல்லையில் நரசிம்மன் வந்திறங்கிய கடற்கரையில் தான் நின்றன இரண்டு யாளிகளும். குட்டி யாளி மிரண்டு ஓடும் முன், வாலிப யாளி அதனை துதிக்கையில் தன் பக்கம் இழுத்து நிறுத்தி சமாதானம் செய்தது.
அவைகள் ஓரளவு அமைதியானதும் நரசிம்மன் தனது இருப்பை உணர்த்தினான். வாலிப யாளி துதிக்கை மூலமாக அவனைத் தொட்டுப் பார்த்துவிட்டு மெல்ல காட்டின் உள்ளே நடந்தது.
நரசிம்மனையும் பிடித்துக் கொண்டு, குட்டி யாளியையும் அது பாதுகாத்தபடி நடப்பதைக் கண்ட மகதனுக்கு கண்களில் மின்னல் வந்து சென்றது. பச்சைக் கண்களும் அதீதமாக மிளிர்ந்து காணப்பட்டன.

